×

காஷ்மீரில் இருந்து கொண்டு வரப்பட்ட 6 ஆயிரம் டிரவுட் மீன் குஞ்சுகள் அவலாஞ்சி அணையில் விடுவிப்பு

ஊட்டி : காஷ்மீரில் இருந்து கொண்டு வரப்பட்டு நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி அரசு மீன் பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் டிரவுட் மீன் குஞ்சுகளில், முதற்கட்டமாக அவலாஞ்சி அணையில் 6 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன.  நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே அவலாஞ்சியில் டிரவுட் மீன் குஞ்சுகளை இருப்பு வைத்து வளர்த்தெடுக்க 1863ம் ஆண்டு பிரான்சிஸ் என்ற மீன்வள ஆராய்ச்சியாளரால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 1907ம் ஆண்டு ஹென்றி சார்ல்டன் வில்சன் என்ற ஆங்கிலேய மீன்வள ஆராய்ச்சியாளரால் டிரவுட் மீன்குஞ்சு பொறிப்பகம் மற்றும் வளர்ப்புப் பண்ணை தொடங்கப்பட்டது.

இப்பண்ணையானது கடல் மட்டத்திலிருந்து 2036 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பண்ணையில் டிரவுட் மீன்களிலிருந்து முட்டைகளை எடுத்தல், முட்டைகளிலிருந்து மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்தல், மீன் குஞ்சுகளை வளர்த்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஆண்டுக்கு தோராயமாக 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்தெடுக்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு பெய்த கனமழை காரணத்தினால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் அவலாஞ்சி டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகம் கடுமையாக சேதமடைந்தது. இதனை தேசிய வேளாண் அபிவிருத்தி-ஆர்கேவிஒய் திட்டத்தின் கீழ் நீர்வழி பாதை பழுது பணிகளுக்காக ரூ.10 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு பழுது பார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
 பின்னர் கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம், கோக்கர்நாக் அரசு டிரவுட் மீன் பண்ணையிலிருந்து 20 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு அவலாஞ்சி டிரவுட் மீன்குஞ்சு பொரிப்பகத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் இணைப்பு பாலம் ரூ.17.22 லட்சம் மதிப்பிலும், செக்டேம் ரூ.32.04 லட்சம் மதிப்பிலும், வடிகால் ரூ.43.03 லட்சம் மதிப்பிலும், தடுப்புச்சுவர் ரூ.34.93 லட்சம் மதிப்பிலும், 5 மீன் வளர்ப்பு குளம் ரூ.18.79 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.2.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணையினை நவீன மயமாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவலாஞ்சி அணையில் முதற்கட்டமாக 6 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகள் விடுவிக்கும் பணிகள் நடந்தது. மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று, அவலாஞ்சி அணையில் மீன் குஞ்சுகளை விடுவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரின் ஆணையின் படி 20 ஆயிரம் எண்ணிக்கையில் டிரவுட் மீன் முட்டைகள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கோகர்நாத் டிரவுட் மீன் பண்ணையில் இருந்து கொள்முதல் செய்து, அவலாஞ்சி அரசு டிரவுட் மீன் பண்ணையில் இருப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் டிரவுட் மீன் முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு அவலாஞ்சி பண்ணையில் கடந்த மாதம் 6ம் தேதி முதல் இருப்பு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த 20 ஆயிரம் டிரவுட் மீன் முட்டைகளில் தற்போது 14 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன் குஞ்சுகளில் முதற்கட்டமாக அவலாஞ்சி அணையில் 6 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டு உள்ளது. 2ம் கட்டமாக மீதமுள்ள டிரவுட் மீன்குஞ்சுகள் லக்கடி, மேல்பவானி, தேவர்பெட்டா மற்றும் எமரால்டு நீர் தேக்க பகுதிகளில் உள்ள நீரோடைகளில் விடுவிக்கப்படும், என்றார். இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் தில்லைராஜன், உதவி இயக்குநர் கதிரேசன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kashmir ,Avalanchi Dam , Ooty: Trout fry brought from Kashmir and maintained at Avalanchi Government Fish Farm, Nilgiris district,
× RELATED அதிக வரி, போலீஸ் அடக்குமுறை எதிர்த்து...